Tuesday, 18 February 2014

பெண்ணரசி.

பெண்ணே மன்னிப்பாயா?

பெண் அரசியே உன்
எண்ண உரசல்களால்
எழும் தீ சீறுவது நீ
எழுவதில் புரிகிறது.

பத்தினியும் கொலை
புரிவாள் என்பதை
பழமொழியில்தான்
படித்தோம் அன்று .

ஆனால் அதுதான்
அதிசய உண்மைகள்! 
நித்தமும் செய்திகள்!
நிகழ்வன இன்று!

குடித்துத் தினமும்
அடித்துக் கொடுமை!
குடிக்கக் கஞ்சியும்
குழந்தைக்கு இல்லை.

கெடுக்கும் சூதினால்
அடுப்பு எரியவில்லை!.
தடுத்துக் கேட்டால்
கொடுமைச் சூடுகள்.

தட்டுமுட்டுச் சாமான்கள்
கட்டும் புடவைகள்
அத்தனையும் அடக்கம்
அடகுக் கடையிலே.

படிக்கும் பிஞ்சுள்
பள்ளி மறந்தன.
துடிக்கும் பசியினால்
துயர ஓலங்கள்.

நரகம் இதுவென
பழகிப் போனாலும்
கரையும் மழலைகள்
உறைய என் செய்வாள்?

கூலி வேலையில்
கும்பி கழுவவும்
பாவி இவனால்
ஆவி கலையுதே!

ஆணாதிக்கம் அது
வீணாதிக்கமானால்
தானும் குழந்தையும்
தற்கொலை செய்வதோ!

பேதையர் அப்படி
பாதையை மாற்றி
சனியன் கணவனை
புணிதமெனக் கொல்வதோ!

புதுமைப்பெண்கள்
புறப்பட்டதும் சரி!
பதுமை அல்லவென
பறை சாற்றியதும் சரி!

கொலைக் குற்றமாகி
குடும்பம் அழிந்தபின்
நிலையற்று சிறுசுகள்
அலைவதும் சரியோ!

வகைகெட்ட கணவனை
வாரிசுக்காக மன்னிப்பீர்!
புகையட்டும் அவனாக
போகட்டும் தானாக.

சுதந்திர நாட்டில் இங்கு
சுதந்திர சுவாசமில்லை!
பாதுகாப்பில்லா சூழலில்
பாழ் பட்டும் போனதோ!

மனிதம் தொலைந்தும்
புனிதமிழந்ததோ!
பொய்மையோ சுதந்திரம்!
வறுமையே நிரந்தரமோ!

ஏழையர் வாழ்விங்கு
ஈழம்போல் ஆனதோ!
நாளும் கழிவதிங்கு
யுகம்போல் ஆகுதோ

மதுவுக்கும் சூதுக்கும்
மரண தண்டனை கொடுப்பீர்!
மனித இனத்திற்கிங்கு
விடுதலை அளிப்பீர்!



கொ.பெ.பி.அய்யா

No comments:

Post a Comment