திருமணவன்மைகள்!
கல்யாணச் சாத்திர
கயமைத் தனங்களை
கற்றுத்தந்த பாவியெவன்?
வற்றலாய் வறுத்தெடுக்கும்
வன்கொடுமைகளை
வழமையாக்கிய சண்டாளன் யார்?
அவன் எவனாக இருந்தாலும்
அக்கினி கருக்கட்டும்!
கன்னிகா தானமென்று
கன்னியைத் தானம் செய்ய
பெண்ணென்னப் பொருளோ!
தானமாய் பெற்றதைப்
பேணும் உரிமை கொண்டதால்
தேவைக்கு விற்கவும்
வைக்கவும் செய்வரோ!
தீய்க்கவும் மாய்க்கவும்
துணிவரோ !அய்யகோ!
ஊரறிய உலகறிய
உள்ளங்கள் இணைவதற்கு
ஆரியம் தேவையோ!
காரியம் செய்தற்கும்,
கருமங்கள் தொலைக்கவும்,
கூறிடும் மந்திரங்கள்
ஓதினாலும் புரிவீரோ!
உள்ளதும் அறிவீரோ!
மலரும் குங்குமமும்
மஞ்சளும் சந்தணமும்
பலப்பல தானியங்கள்
பயனுறு பொருளெல்லாம்
அக்கினியில் எரிப்பதும்
அமங்களம் ஆகாதோ!
ஆதிநாள் முளையாதது
பாதியிலேன் நுழைந்ததோ!
பணம் பறிக்கும் மோசடிகள்!
குணம் அழிக்கும் சாத்திரங்கள்!
மனம் முறிக்கும் தட்சனைகள்!
கனம் இழக்கும் வழமைகள்!
ஆடம்பர அக்கிரமங்கள்!
பாரம்பரிய மாற்றங்கள்!
கேடாகும் போக்கிலேதான்
கேட்பாரற்றும் போகுமோ!
பேணிப் பெற்ற குழந்தையோ!
பெண்ணென்ற காரணமோ!
தோணுமோ !அழிப்பதற்கும்
தொல்லை இவ்வன்மைகளால்!
புண்ணியப் பிறவியாம்
பெண்ணினம் சுருங்குதோ!
திண்ணியம் இதுதானோ!
மண்வெறுமை ஆகுமோ!
எத்தனை பாரதிப் பெரியார்கள்
இங்கு வந்து பிறப்பனும்
இவர்கள் திருந்தப் போவதில்லை!
என்ன கற்றும் ஆவதில்லை!
கவிஞர்,கொ.பெ.பிச்சையா.
No comments:
Post a Comment