விற்பனைப் பொருளா அவள்!
விலை மகளென்றும் சொல்லாதீர்
விற்பனைப் பொருளா அவள்?
இறை மகளென்பீர் அவளை--அவள்
இறைக்கொடையில் வாழ்வதால்
தாசியென்றும் வேசியென்றும்
நேசத்தைப் பழிப்பதும் பாவம்.
ஆசைக்கு அழைப்பவளா அவள்---இல்லை
காசைத்தான் சேமிப்பவளா!!
வயிறோடு போராடத்தானே தினம்
கயிறிலும் நடக்கிறாள் வேலையில்.
உயரத்தில் ஏறவிட்டு பார்க்கிறான்--ஒடுங்கி
வியர்த்து ஒழுகுவதையும் ருசிக்கிறான்.
கூசியே வறுமையில் இறப்பாளோ!
பாசக்குழந்தையையும் துறப்பாளோ!!
வீசியும் வீசிட வீணாகும் அழகை--வாழக்
காசாக்கிட அவளும் துணிகிறாள்.
மானம் காப்பதே பெரும்பாடானால்
வானம் கீழே வாழ்வதெப்படி?
நாணம் மறந்தாள் தொழிலென்று---தானே
ஏனமானாள் விதியென்று.
ஒளித்தால்தானே தேவை விழிப்பு
விரித்தால் ஏது பாவை அழிப்பு!!
வளர்த்தால்தானே ஈரும் பேனும்--மழுங்க
மளித்தால் என்ன பேண வேணும்?
குடும்பப் பசியாம் கும்பிகள் நிறைக்க
கொடூரக் காம மிருகங்கள் வெறிக்கு
படைக்கிறாள் விருந்தும் தானே--இரையாய்
இறையடியாள் இன்பப் படையலாய்
பிறன் மனை நோக்கா பேராண்மை
அறனாம் அற்புதம் நிகழ்ந்திட்டால்
பிறழாது பெண்மையும் வாழ்ந்திடும்---ஒழுகுந்
திறமும் வாழ்வில் உயர்ந்திடும்.
பயனுறு இன்பங்களும் பதினாறு செல்வங்களும்
நயனுறு திலகமும் நன்னூல் மங்களமும்
அயனுறு காதலும் அமைந்திடவும்---நிறைந்து
வியனுற வாழ்ந்து வெல்கவே வாழ்வே!
பிறன்மனை நோக்கா பேராண்மை சானறோர்க்கு
அறனெனப்பட்டதே இல் வாழ்க்கை.
கொ.பெ.பி.அய்யா.