Monday, 27 October 2025

வேலன் காட்சி.

வேலன் காடசி.

வேலா உன்னெழில் காட்சி--பல
நாளா வேண்டிய மாட்சி
அருளை வேண்டி வந்தேன் --உன்
மகிமை கண்டு வியந்தேன்.

கருணைக் கடலே முருகா--பல
பெருமை அறிந்த சிறுவா.
உருவைக் கண்டு உவந்தேன்--உன்
அருமை இன்று உணர்ந்தேன்.

கந்தா என்றால் என்ன --பல
கவர்ந்த ஒன்றா தன்னே!
இந்தா என்றே வழங்கும்--உன்
இரங்கும் மனமே துலங்கும்.

அழகின் வடிவம் தமிழே--பல
உலகின் படிவம் அமுதே.
மொழியின் இனிமைக் குணமே--உன் 
விழியின் கருணைத் தினமே.

மயிலும் சேவலும் உனதோ--பல
பயிலும் ஆவலும் தனதோ.
கூவும் குரல்கள் அதுவோ--உன்
ஏவும் கரங்கள் பொதுவோ.

யாவும் வினைகள் நீயே--பல
யாதும் செயல்கள் தாயே.
மேவும் நாட்கள் நலமே--உன் 
ஈவும் அருளும் வரமே.

கவிஞர். கொ. பெ. பிச்சையா.

Sunday, 16 March 2025

பெண் பாவம்.

அதுக்குமட்டும் இல்லையாக்கும்

அதுக்கு மட்டும் இல்லையாக்கும்!
சாதி மட்டும் தொல்லையாக்கும்.!
ஒதுக்குப்புறம் கொல்லையாக்கும்!
அதுக்கப்புறம் எல்லையாக்கும்.!

சாதி சொல்லவில்லையாக்கும்!
சதை கசக்கவில்லையாக்கும்!
மேலுங் கீழும் அல்லலாக்கும்!
கீழும் மேலும் அல்வாவாக்கும்!

வந்தால் வேலை உள்ளவாக்கும்!
தந்தால் கூலி கள்ளமாக்கும்.!
தீண்டல் மட்டும் வெல்லமாக்கும்!
தீண்டாமை இல்லையாக்கும்!.

சகோதரிக்கு இல்லையாக்கும்!
சண்டாளிக்கே உள்ளதாக்கும்!
இல்லாளில் இல்லதாக்கும்!
ஏழையிடம் உள்ளதாக்கும்!

நக்கத்தேனும் இல்லையாக்கும்!
நாயும் நீ பிள்ளையாக்கும்!
வெக்கமதும் இல்லையாக்கும்!
பக்கமாதும் கள்ளமாக்கும்!

குழந்தை பெறவில்லையாக்கும்!
கொஞ்சும் சுகம் பிள்ளையாக்கும்!
மனிதகுணம் இல்லையாக்கும்!
மாவினத்தின் செயலாக்கும்!

கண நேரத் தொல்லையாக்கும்!
காக்கும் பலம் இல்லையாக்கும்!
பெண்ணிச்சைப் பொருளாக்கும்!
தன்னிச்சைக் களமாக்கும்!
வன்மத்தின் வடிகாலோ!
பெண்மைக்கிங்கு காப்பில்லையோ!

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 15 March 2025

என் சுவாசக் காற்றே!

நீ என் சுவாசக் காற்றே!!

மண்ணிற்பல் அருமை 
உயிரினங்களை
கண்ணிற் படாமல் தொலைத் திட்டோம்!
மண்ணின் உயிரான பெண்ணினமும் அதுபோல் ஆமோ!
எண்ணிட அச்சம் விஞ்சுதே இதயம் வலிக்குதே
விண்ணிடம் வேண்டிக் 
கெஞ்சிட லாமோ!

காலத்தின் சுழற்சியை  நிறுத்தும் முயற்சியில்
நாளும் பாலியல் வன்மங்கள் 
நடந்தேறுகின்றன!
வாழும் உலகின் சுவாசத்தை 
அடைத்து விட்டு
வாழப்போவதும் இங்கு யாரோ எதுவோ!
கோலமில்லாப் புள்ளிகளாய்  
குன்றுகளே மிஞ்சுமோ!

வாசலை அடைத்த வீட்டில் 
வரவுக்கு யாரப்பா!
வாரிசும் பெண்ணின்றி வருவதுண்டோ கூறப்பா!
வாயு மட்டும் அலையுமிங்கு 
வரலாறு சுமந்தப்பா!
பேயுங்கூடத்திரியாது பெண்ணில்லா 
பூமியப்பா!
ஓயுமுன் உணர்ந்து நீ பெண்ணினம் போற்றப்பா!

கடலிருக்கும் காற்றிருக்கும் 
மலையும் இருக்கும்!
நிலமிருக்கும் நீரிருக்கும் 
வளமும் இருக்கும்!
இயற்கை தந்த எல்லாச் செல்வங்களும் இருக்கும்!
ஆணின ஆதிக்கமும் 
ஆங்காங்கே ஒளிந்திருக்கும்!
ஆனால் மனிதத்தடம் மட்டும் 
மறைந்திருக்கும்!
  
அருகித்தான் சுருங்குது அருமைப் 
பெண்ணினம்!
ஆராய்ச்சி மணியொலியின் 
எச்சரிக்கை தினந்தினம்!
கருவிலே கொன்றழிக்கும் 
கருமந் தொலையவில்லை!
திருமண வன்மைகளும் 
தேசத்தில் குறையவில்லை!
ஒருமனப்பட்டு உயிராம் பெண்குலம் 
காப்போம்!

நீ என் சுவாசக் காற்றே!
நீ வாழ வேண்டுமே!
நீயே சக்தி!சாமி நானே!
நீயும் நானும் சேராவிட்டால்
ஏது காதல் பக்தி!!

இரண்டில் ஒன்று
எது குறைந்தாலும்
வரண்டு விடாதோ காதல்
வரமாய் கொண்டேன்
வாழ்வில் கண்டேன்
வாழ்வோம் இனிதே சுபமே!

உலகம் நமது கையிலே
ஒப்படைத்தான் இறைவனே!
விலக்கும் பொருளோ நீ!
வேர்நீ உலகுக்கு.
உலகம் உனையன்றி
நிலைக்குமோ உயிரன்றி!

உயிர்கள் செய்வோம்!
பயிர்கள் வளர்ப்போம்!
உலகம் நிலைக்க
உமையாள் துதிப்போம்.
உறுதியில் இருப்போம்
உணர்விலிது சத்தியம்!

இது ஒவ்வொரு இளஞனும்
இதயம் கொள்க!
புதுப் பிரளயம் தவிர்த்திட
பெண்ணினம் காக்க!
                   
கவிஞர்.கொ.பெ,பிச்சையா.









Friday, 7 March 2025

பெண் விரதம்.

விரதம்..........!!

வரதட்சனைப் பெற்றுத்தான்
வரனாவேன் என்போனே--உனது
கரம் பற்றுவதைவிட
உரமாகி மண்ணுக்கு
உயிர் கொடுப்பதே மேல்!

பணம் வாங்கி ஒருத்தி
படுக்கை விரித்திட்டால்-அவளை
இனம் கெட்ட வேசியென
இழிக்கும் சமுதாயமே
இவனும் வேசைப் பயலே!

கல்யாணச் சந்தையில்
காசுக்கு விலையாகும்---ஒரு
நெருப்பு விதையை
புருசனாக்கி எரிவதோ!
விரதமிருப்பேன் வீட்டிலே!

சமூகக்கவி.கொ.பெ.பிச்சையா.




பொன்னே பூச்சரமே!

வளமென்ன இனிவேண்டும்?

பொன்னே பூச்சரமே புன்னைமர இளங்காற்றே
கண்ணே கண்மணியே காலையிளங் கதிரொளியே
பெண்ணே பெண்ணரசே பேசுமொழி சித்திரமே
எண்ணே என்மகளே எழுந்துவா என்னிடமே

தந்தைநான் தவமிருந்து தனித்துவரம் பெற்றேனே
எந்தைவழி பேரெடுக்க உந்தாயில் கண்டேனே
முந்தைநாள் நான்தந்த முத்தங்களை சேர்த்துவைத்து
இந்தைநாள் மொத்தமாய் இன்பமுனைத் தந்தாளே!

ஆழ்கடல் தேடலிலே ஆனிமுத்து பெற்றதுபோல்
வாழ்ந்தயெம் வாழ்க்கை யுன்னால் வரலாறாய் மலர்ந்ததம்மா.
தேர்ந்தயெம் பந்தமிது தேனாகிக் கனிந்ததம்மா.
நேர்ந்தயெம் நன்மை யெலாம் நீயாகி வந்தாயம்மா.

குலம்செய்த புண்ணியமோ குலமகளேநீ கிடைத்தாய்.
நலமெல்லாம் நீயென்றே குலம்வாழ அறம்படைத்தாய்.
வளமென்ன இனிவேண்டும் வள்ளல் நீ வந்துவிட்டாய்
பலமென்ன பெறவேண்டும் படை நீயே 
செல்லம்மா.

கவஞர்.கொ. பெ. பிச்சையா.








பெண்ணின் பெருமை.




பெண்ணின் பெருமை!!

பெண்--அன்பின் அசல்!
பெண்--ஆன்மாவின் நகல்!
பெண்--இயற்கையின் சிரிப்பு!
பெண்--ஈதலின் பதிப்பு!
பெண்--உறவின் இணைப்பு!
பெண்--ஊக்கத்தின் படைப்பு!!
பெண்--எழுச்சியின் துடிப்பு!
பெண்--ஏற்றத்தின் துணை!
பெண்--ஐந்தின் பொருள்!
பெண்--ஒழுகலின் சின்னம்!
பெண்--ஓங்கார மந்திரம்!
பெண்--ஔடத சூத்திரம்!
அஃதே பெண்ணின் பெருமை!


கொ.பெ.பி.அய்யா









பெண்ணடிமை ஏன்?

அடிமைகளோ
பெண்ணினம்!

பாரதியும் மறைந்தானோ!
பெண்ணுரிமையும் மறந்ததோ!
அன்றே சொன்னேன் நானுமே!
ஒன்றாய்ப் பெண்கள் கூடினால்,
உலகை வென்றும் ஆளலாம்
இன்னும் ஏன் அடிமையாம்?
பெண்ணுரிமை மடிந்ததா?
என்ன இதுக் கொடுமையோ!

தன்னறிவும் இல்லையோ!
துணிவும்  எழ வில்லையோ!
தொன்மையின் மடமையோ!
பணிவதே பெண் விதியோ!
கண்களை விலை கொடுத்தா?
வண்ணோவியம் வாங்குவது!
பெண்ணவளை அலங்கரித்து
பேயிடத்துக் கொடுப்பதோ!

என்னதான் சுகங்கண்டாள்.
எல்லாமே இல்லமென்றாள்.
தன்னையே அர்ப்பணித்தாள்
தனக் கென்று என்னக் கொண்டாள்?
தியாகத்தின் வடிவமாக
வியாதியின் விளக்க மாக
தவறிடுஞ் செயலுக்கும்
தானேதான் பொறுப்பானாள்.

தொட்டதுக்கும் குற்ற மென்பார்.
பட்டதுக்கும் பழி சுமப்பாள்.
கெட்டுக் குப்பை அடியாளென்பார்.
பட்டமரம் அளென்பார்.
அஞ்சனம் கொஞ்சும் விழி
அஞ்சி வழியக் கருத்ததோ!
மஞ்சனம் மணக்கும் மேனி
வெஞ்சூட்டால் வெளுத்ததோ!

பூச் சூடும் கார்க் கூந்தல்,
நாய்களாடும் குப்பை மேடோ!
ஏச்சுக்கும் பேச்சுக்கும்,
இவளென்ன விலைமகளோ!
சமைக்க வந்த வேலைக் காரியோ!
சாப்பாட்டுக்கு பிச்சைக் காரியோ!
விலை கொடுத்து வந்தவளோ
விலை மகனுக்கு அடிமையோ!

பெண்ணுக்குப் பெண்ணெதிரி.
கண்ணுக்கு கண்ணெதிரி
மருமகளா வந்தவளே மாமியார் 
மறுபறவிக் கொடுமைக்காரியோ!
அவள் கொண்ட கொடுமைகளே,
இவள்தலையில் விடிந்ததோ!
நாளை இவள் அப்படித்தான்
நிலைமை மாறிச் செய்வாளோ!

எத்துணைப் பெண்ணுக்கு!
இப்புவியிற் கொடுமைகள்!
செத்தொழியும் வேளைக்கூட
சீவனுக்கு அமைதியில்லை!
பெத் தணைத்தப் பிள்ளையும்
பெரு மைக்கான கணவனும்
ஊர் உறவுக்குப் பொய்யாக
தேரனுப்பப் பாலூற்றுவார்.

அனைத்தையும் அவள் மறந்து
அப்போதும் கண்ணொழுகி
பிணை துறந்து ஏகுவாளோ!
பெண்ணெனும் பாவ மகள்!

கவிஞர்.கொ.பெ.பிச்சையா.





Tuesday, 25 February 2025

அவளே எல்லாம்.

அவளே எல்லாம்!

அவளே சொல்லாம்
அவளே மொழியாம்
அவளே அன்பாம்
அவளே எல்லாம்.

அவள்தான் அம்மா.
அவள்தான் ஆரம்பம்.
அவளின் உயிராம்.
அவள் கொடை வாழ்வாம்.

அவள் தந்த உதிரம்
அவள் அதன் ஓட்டம்
அவள் வடித்த உடலாம்
அவள் அளித்த கடனாம்.

அவள் கொடுத்த உண்ணீர்.
அவள் நினைவுக் கண்ணீர்.
அவள் பாடிய தாலாட்டு
அவள் துதிப் பாராட்டு.

அவள் விரித்த மடிப்பு
அவள் கனவின் விரிப்பு.
அவள் அணைத்த பாசம்
அவள் வம்சம் வீசும்.

அவள் பதித்த முத்தம்
அவள் அடைந்த இன்பம்.
அவள் கொண்ட சித்தம்
அவள் அருள் செல்வம்.


கொ.பெ.பிச்சையா.







Monday, 24 February 2025

தாலாட்டு.

தாலாட்டு

ஆராரோ ஆரிரரோ
அன்னக்கிளி கண்ணுறங்கு
ஊராரும் தூங்கிவிட்டார்
ஒருச்சாமம் ஆயிடுச்சு
உன்விழிகள் துஞ்சலியோ
உற்றதென்ன கண்மணியே.

கள்ளிப்பால் ஊட்டுவேனோ
கட்டித்தங்கம் ராசாத்தி!.
அள்ளிவீசிப் போடுவேனோ
அரசாள பிறந்தவளே!
காலம் கூடிக் கனியுதடி
கண்ணுறங்கு பொன் மகளே!.

பெண்ணாப் பிறந்தோமென்று
பிஞ்சுக்கொடி கலங்காதே
கண்ணாலச் சந்தையெண்ணி
கவலைப்பட்டும் மயங்காதே
கல்விகற்று உயர்ந்துவிட்டால்
கால்தொழுவார் கண்ணுறங்கு!

வீரம்பெற்று பெண்களின்று
வித்தைகளும் கற்றுவிட்டார்
தீரமுற்றுப் பெண்களின்று
திசையெங்கும் வென்றிட்டார்..
பெண்ணடிமை  ஒழியுதம்மா
பெண்ணரசி கண்ணுறங்கு.

ஈழங்கூடி மலருதம்மா
இளந்தளிரே கண்ணுறங்கு!
நாளுங்கொடி உயருதம்மா
நன்மணியே கண்ணுறங்கு!
வேளையதும் வளருதம்மா
விடியட்டும் கண்ணுறங்கு!

சூலம் குத்தி ஆடுதம்மா
சூரத்தமிழ் கண்ணுறங்கு!
காலம் வென்று தேடுதம்மா
கரும்புலியே கண்ணுறங்கு!
பாலம் ஒன்றும் போடுதம்மா
ஈழம் கூடக் கண்ணுறங்கு!

கொ.பெ.பி.அய்யா.






மங்கை மகிமை.

மங்கையர் மகிமை.

மங்கையராய் பிறந்தவர் மாதவம் செய்தவர்.
கங்கை போலவர் களங்கம் அல்லாதவர்.
மூன்றாம் பருவம் ஈன்றார் கருவம்.
பூவின் வாசம் பூத்தே வீசும்.
காதல் மலரும் கட்டும் அலரும்
காவல் தாண்டவும் ஆவல் தூண்டும்.

கொ. பெ. பிச்சையா.