நீ என் சுவாசக் காற்றே!!
மண்ணிற்பல் அருமை
உயிரினங்களை
கண்ணிற் படாமல் தொலைத் திட்டோம்!
மண்ணின் உயிரான பெண்ணினமும் அதுபோல் ஆமோ!
எண்ணிட அச்சம் விஞ்சுதே இதயம் வலிக்குதே
விண்ணிடம் வேண்டிக்
கெஞ்சிட லாமோ!
காலத்தின் சுழற்சியை நிறுத்தும் முயற்சியில்
நாளும் பாலியல் வன்மங்கள்
நடந்தேறுகின்றன!
வாழும் உலகின் சுவாசத்தை
அடைத்து விட்டு
வாழப்போவதும் இங்கு யாரோ எதுவோ!
கோலமில்லாப் புள்ளிகளாய்
குன்றுகளே மிஞ்சுமோ!
வாசலை அடைத்த வீட்டில்
வரவுக்கு யாரப்பா!
வாரிசும் பெண்ணின்றி வருவதுண்டோ கூறப்பா!
வாயு மட்டும் அலையுமிங்கு
வரலாறு சுமந்தப்பா!
பேயுங்கூடத்திரியாது பெண்ணில்லா
பூமியப்பா!
ஓயுமுன் உணர்ந்து நீ பெண்ணினம் போற்றப்பா!
கடலிருக்கும் காற்றிருக்கும்
மலையும் இருக்கும்!
நிலமிருக்கும் நீரிருக்கும்
வளமும் இருக்கும்!
இயற்கை தந்த எல்லாச் செல்வங்களும் இருக்கும்!
ஆணின ஆதிக்கமும்
ஆங்காங்கே ஒளிந்திருக்கும்!
ஆனால் மனிதத்தடம் மட்டும்
மறைந்திருக்கும்!
அருகித்தான் சுருங்குது அருமைப்
பெண்ணினம்!
ஆராய்ச்சி மணியொலியின்
எச்சரிக்கை தினந்தினம்!
கருவிலே கொன்றழிக்கும்
கருமந் தொலையவில்லை!
திருமண வன்மைகளும்
தேசத்தில் குறையவில்லை!
ஒருமனப்பட்டு உயிராம் பெண்குலம்
காப்போம்!
நீ என் சுவாசக் காற்றே!
நீ வாழ வேண்டுமே!
நீயே சக்தி!சாமி நானே!
நீயும் நானும் சேராவிட்டால்
ஏது காதல் பக்தி!!
இரண்டில் ஒன்று
எது குறைந்தாலும்
வரண்டு விடாதோ காதல்!
வரமாய் கொண்டேன்
வாழ்வில் கண்டேன்
வாழ்வோம் இனிதே சுபமே!
உலகம் நமது கையிலே
ஒப்படைத்தான் இறைவனே!
விலக்கும் பொருளோ நீ!
வேர்நீ உலகுக்கு.
உலகம் உனையன்றி
நிலைக்குமோ உயிரன்றி!
உயிர்கள் செய்வோம்!
பயிர்கள் வளர்ப்போம்!
உலகம் நிலைக்க
உமையாள் துதிப்போம்.
உறுதியில் இருப்போம்
உணர்விலிது சத்தியம்!
இது ஒவ்வொரு இளஞனும்
இதயம் கொள்க!
புதுப் பிரளயம் தவிர்த்திட
பெண்ணினம் காக்க!
கவிஞர்.கொ.பெ,பிச்சையா.
No comments:
Post a Comment